லண்டனில் இளையோர்கள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் மனுக் கையளிப்புடன் நிறைவு!
தமிழீழ விடுதலைக்காக தமிழக மாணவர் சமூகம் முன்னெடுத்துவரும் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழீழ மக்களுக்கான உரிய அரசியல் தீர்வை வலியுறுத்தியும் 6.கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ் இளையோர்கள் முன்னெடுத்துவந்த கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இலங்கைத் தீவில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வாழும் ஈழத் தமிழர்களது உரிமைப் போராட்டத்திற்கான உரிய தீர்வாக சர்வதேச நாடுகளின் ஆதரவுடன், ஐ.நாவின் மேற்பார்வையில் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும், எனவும், இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து அதனை இந்தியா ஊடாக வலியுறுத்தி, தமிழ் இளையோர்களான தினேஸ், திராவிடன், தமிழ் தினேஸ், ஆகிய மூன்று இளையோர்களும் தண்ணீரும் அருந்தாது முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் மனுக் கையளிப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக 18.03.13, திங்கள் கிழமையில் முதல் தண்ணீரும் இன்றி தொடரப்பட்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 22.03.13.வெள்ளி அன்று மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.
பிரித்தானியாவில் நிலவுகின்ற கடும் குளிரிலும் மத்தியில், தூதரக வாசலில் உரிய வசதிகள் எதுவும் இன்றி, தமது போராட்டத்தினைத் தொடர்ந்துவந்த மூன்று இளையோர்களையும், தமிழகம், தமிழீழத்தில் இருந்தும், அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ், ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, மலேசியா சிங்கப்பூர், போன்ற நாடுகளில் இருந்து பெருமளவான இளையோர்கள், இன உணர்வாளர்கள் தொடர்புகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
கடுமையான சீரற்ற காலனிலையில் தண்ணீரும் இன்றி போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டுக்கொண்டு செல்வதை அவதானித்த வைத்தியர் தெரிவித்த கருத்துக்களை அடுத்து, பலரின் வேண்டுகோளிற்கு இணங்கவும், நீண்டகால தமிழீழ ஆதரவாளரும், ம.தி.க. பொதுச்செயலாளருமான திரு.வை.கோபாலசாமி, மற்றும் நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களினதும் வேண்டுகோளுக்கு இணங்கவும், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்தியத் தூதரக அதிகாரியிடம் கையளித்து தமது கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை மாலை 5,மணியளவில் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
இளையோர்களின் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்திலும் மனுக் கையளிப்பு நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை இளையோர்களுக்கு வழங்கியிருந்தனர்.
இளையோர்களின் அடுத்தகட்ட தொடர் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்கள் சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் இந்திய அரசிடமும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு:
*"இனவழிப்பு தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்"
*"தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்"
*"தமிழர் தாயகத்தின் மீது சிறிலங்கா அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் முகமாக பாதுகாப்புப் பொறிமுறை ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்"
*"சிறிலங்கா அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணமல் போன போராளிகள் மற்றும் பொதுமக்களின் விபரங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும், கால வரையறை இன்றி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்"
*"தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு, பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், அரச படைகளின் அத்துமீறிய காணிச் சுவீகரிப்புக்கள், வழிபாட்டுத் தளங்கள் அழிக்கப்படுவது போன்ற செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு,அங்கு நிலைகொண்டிருக்கும் அரச படைகளும் அகற்றப்பட வேண்டும்".
*"மேற் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளையும், சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கு இந்திய வல்லரசு தனது முழுமையான ஆதரவினை வழங்கி தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை கண்டு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன், சுதந்திரமாக வாழ, வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்" என்ற 6.கோரிக்கைகள் அடங்கிய மனு இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.





__._,_.___
|
No comments:
Post a Comment