Wednesday, March 20, 2013


ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


தமிழர்களின் வாழ்வு போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்தது. போராட்டமே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே போராட்டமாகவுமே தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களுக்கு ஆதரவாக உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் என்றும் தோற்றுப்போவதில்லை என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மாணவர்களின் போராட்டங்களை பார்க்கின்ற போது எமது உள்ளங்கள் உருவேறுகின்றன. உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன. ஆனால், நாங்கள் இங்கே எதுவுமே செய்ய முடியாமல் எமது பல்கலைக்கழகம் சிறைக்கூடமாக்கப்பட்டுள்ளது என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது வேதனைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழக மாணவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளதாவது,

உலகம் உருண்டையானது. அந்த உலக உருண்டையில் தமிழ் மக்கள் வாழ்வதற்கு ஒரு துளி நிலம் இல்லை. அந்த நிலத்திற்காக போராடிய தமிழினம் சிங்கள ஏகாதிபத்தியத்தினால் கொன்று குவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தமிழினம் இன்று வீதியில் நடைப்பிணமாக அலைகின்றது.

வன்னியில் வாழ்கின்ற எமது உறவுகள் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே திண்டாடுகின்றார்கள். கணவர்கள் தடுப்பு முகாம்களில் உள்ள பெண்கள் தினமும் சிங்கள இராணுவத்தால் காமுறப்படுகின்றனர். உன் கணவனை விடுவிக்கிறோம் நீ என்னுடன் வா என்று சிங்களப் படை தமிழ்ப் பெண்களைக் கூவி அழைக்கிறது. போரில் காயமடைந்த, மக்கள் ஊனமுற்ற மக்கள் ஒரு கைத்தடியின்றி தள்ளாடுகின்றனர். முன்னாள் போராளிகளின் வாழ்வு சின்னாபின்னமாகியுள்ளது.

இந்த நிலையில், சிங்கள தேசம் மங்கலம் பாடிக்கொண்டிருக்கிறது. தான் செய்த எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு தமிழர் தாயகத்தில் அபிவிருத்தி இடம்பெறுகின்றது என்று உலகுக்கு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறது.

தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுதான் வடக்கு-கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் செய்கின்ற அபிவிருத்தியாகவுள்ளது. வடக்கு கிழக்கு எங்கணுமுள்ள அரச காணிகள், ஆட்களற்ற தனியார் காணிகள் எங்களும் இராணுவ முகாம்களும் சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறுகின்றன.

அண்மையில் ஐ.நாவில் உரையாற்றிய சிங்கள அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்காவை முன்னேற்றுவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் கால அவகாசம் கேட்டிருக்கிறார். தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள முகாம்கள் அமைக்கவும் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து தமிழர் தாயகத்தை சிங்கள ஆதிக்கமுள்ள இடமாக மாற்றியமைக்கவுமே அவர் ஐந்து வருடங்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். மாறாக தமிழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அல்ல.

இந்த நிலையில், சிங்கள சேனைகளின் ஆதிக்கத்தை தமிழக உறவுகள் முற்று முழுதாக உணர்ந்துகொண்டுள்ளீர்கள். குறிப்பாக எமது பிரச்சினைகளை முற்றுமுழுதாக புரிந்துகொண்ட தமிழக மாணவர்களுக்கு எமது அன்பு கலந்த நன்றிகள். நாங்கள் முதற்கண் உங்களைப் பணிகின்றோம். உங்கள் போராட்டங்களை நாங்கள் மெச்சுகின்றோம்.


இன்று நீங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களில் நாங்களும் வந்து கலந்துகொள்ள ஆவலாக உள்ளது. ஆனால், மீண்டும் நாங்கள் எமது பல்கலைக்கழகத்திற்கு வர முடியாது, ஏன் சிறிலங்காவிற்குள்ளேயே வர முடியாது. கட்டுநாயக்காவில் நிற்பவர்கள் எங்களைக் கைது செய்வார்கள். பின்னர் நாங்கள் காணாமற்போய்விடுவோம். எனவே எங்களுக்கான உங்கள் போராட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ள முடியாமைக்கு முதலில் எங்களை மன்னித்து விடுங்கள்.

ஈழப் போராட்டத்தைப் பெற்றவர்கள் மட்டுமே நாங்கள், ஆனால் எமது போராட்டத்தை வளர்த்து ஆளாக்கியவர்கள் நீங்கள் தான். பெற்ற எங்களைவிட வளர்த்த உங்களுக்கே எமது போராட்டத்தின் நியாயப்பாடுகள் அதிகம் தெரியும். நீங்கள் எமது போராட்டத்தை நேசித்தீர்கள். எங்களைவிட அதிகமாக நேசித்தீர்கள். அதனால்தான் எமது போராட்டத்தை சிங்களவன் அழித்ததை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.


தோழர் முத்துக்குமார், தோழர் செங்கொடி வரிசையில் எத்தனையோ உறவுகள் ஈழத் தமிழர்களுக்காக தங்களையே மாய்த்துவிட்டார்கள். இன்று நீங்கள்
கொதித்தெழுந்திருக்கிறீர்கள். உங்கள் கொதிப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் மத்திய அரசு திண்டாடிக்கொண்டிருக்கின்றது. புலிகளின் போராட்டத்தை அழிக்க ஏன் சிறிலங்காவிற்கு உதவி செய்தோம். இதைவிட உதவி செய்யாமல் இருந்திருக்கலாமே என்று மத்திய அரசு யோசித்துக்கொண்டிருக்கிறது.

மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை நீங்கள் இன்று வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறீhகள்.


அன்பிற்குரிய தமிழக உறவுகளே,

பாண்டிய மன்னன் சிவபெருமானுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்களின் முதுகிலும் வீழந்ததைப் போல சிங்களவன் எங்களுக்கு அடித்த அடி உங்கள் முதுகிலும் எத்தகைய காயங்களையும் வலிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்ந்துகொள்கிறோம். உங்கள் போராட்டங்களைப் பார்த்தே புரிந்துகொள்கிறோம்.

சிறிலங்காவின் சனத்தொகை தமிழ் மக்களையும் சேர்த்து வெறும் இரண்டு கோடி பத்து லட்சம். ஆனால் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ சிறிலங்காவின் ஒட்டுமொத்த சனத்தொகையை விட சில மடங்கு அதிகம்.

எனவே தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் சிறிலங்காவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துவிட்டனர் என்பதை நினைக்கும் போது சிங்களத்திற்கு சித்தம் கலங்குகிறது. செங்களத்தில் தமிழர் சேனையுடன் தனித்து நின்று முட்டி மோத முடியாமல் புறமுதுகிட்டு ஓடிய சிங்களச் சேனைகள் உலகின் சில வல்லாதிக்க சக்திகளுடன் கைகோர்த்து தமிழரின் போராட்டத்தை அழித்ததுடன் லட்சக்கணக்கான தமிழ் மக்களையும் கொன்றுகுவித்தது.

ஈழத் தமிழ் மக்களை நாங்கள் அடித்தால் யார் கேட்பார்கள் என்ற அசட்டுத் துணிவோடுதான் சிங்களம் எங்களை அழித்தது, ஆனால், ஈழத் தமிழர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபித்து எங்களுக்காக நீங்கள் சிங்களவர்களிடம் மட்டுமல்ல உங்களவர்களிடமே (இந்திய மத்திய அரசு) நீதி கேட்டு நிற்கிறீர்கள். உண்மையில் உங்களை நினைக்க எங்கள் தேகம் சிலிர்க்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிங்களவன் எங்களை எங்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் போட்டு உருட்டி உருட்டி உதைத்தான். அதற்கு நாம் நீதி கேட்டதற்காக எங்களை தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றார்கள். இனிமேல் எந்தவொரு போராட்டமும் செய்யக்கூடாது என்று நாங்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறோம். நாங்கள் நொந்துபோயிருக்கிறோம்.

ஆனால், எமக்கு நீங்கள் ஆறுதல் தந்திருக்கிறீர்கள். தமிழர்களின் தன்மானத்தை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். உங்களுக்கு நாம் நன்றி சொல்கின்றோம். எமது தேசம் மலரும்போது நீங்களும் அதில் பங்குதாரர்களாக இருப்பீர்கள். எங்கள் தேசத்தில் உங்கள் பெயர்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்.

எமது இரத்தத்துடன் இரத்தமாக, சதையுடன் சதையாக நீங்கள் கலந்திருக்கிறீர்கள். நாங்களும் நீங்களும் இரத்த உறவுகள் என்பதால்தான் எங்களுக்கு சிங்களவன் அடிக்கின்ற போது உங்களுக்கும் வலிக்கிறது. உங்கள் வலிகளும் எங்கள் வலிகளும் தீர்க்கப்படவேண்டும். அதற்கான உங்கள் போராட்டங்களுக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என்றாலே சிங்கள இராணுவம் அஞ்சி நடுங்கிய காலம் ஒன்றிருந்தது. ஆனால் அதே இராணுவம் இன்று எங்களை அடக்கியாள முற்படுகின்றது. நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம். நீங்களும் எமக்கு உறுதுணையாக இருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம். இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை
ஈழத்தில் மாணவர் மாழ்வதுமில்லை
தமிழர்க்கு விடிவொன்று கிடைக்கின்ற வரைக்கும்
தமிழக மாணவர் ஓய்வதும் இல்லை.


யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்.
யாழ்ப்பாணம்.
17.03.2013


Tamil Spring 2013: 10 million students to fast on 20th of this month in support of Tamil Nadu students protesting with a charter of demands .The demands include referendum for Tamil Eelam.

No comments:

Post a Comment