Saturday, March 30, 2013


மிழ் ஈழம் தான் இலக்கு - என்று உரக்க முழங்கும் எங்கள் மாணவப் பிள்ளைகளின் விஸ்வரூபத்தைப் பார்த்து வியந்துபோய்,    உலகெங்கிலுமிருந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஈழத்து உறவுகள். நன்றிபாராட்ட அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களிடம் நேரடியாகப் போய்ச் சேரவேண்டியவை.  ஏனென்றால், எங்கள் மாணவச் செல்வங்கள் எங்களைக் கேட்டோ, நாங்கள் சொல்லியோ போராடவில்லை. அவர்கள் சுயம்பு. சரியான தருணத்தில் தாங்களாகவே களத்தில் இறங்கியிருப்பவர்கள்.
 
மாணவர் போராட்டத்தின் தாக்கம் குறித்த புரிதலே இல்லாமல் பேசுபவர்கள், ஊடகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களில் யாரோ, மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியதால்தான் மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகியது என்று எழுதப்போய், அந்தச் செய்தி தவறானது என்று கருணாநிதி மறுக்கவேண்டியிருந்தது. அண்ணனை  எப்படியாவது டெல்லியிலிருந்து மதுரைக்கு டிரான்ஸ்பர் செய்துவிடுவது என்கிற நோக்கத்துடன் தம்பி அப்படி மிரட்டியிருக்கக் கூடும் - என்று நம்புபவர்கள் கழகத்துக்குள்ளேயே கூட இருக்கிறார்கள். கருணாநிதியை உண்மையாகவே மிரட்டியது யார் - என்கிற யதார்த்தத்தை உணராதவர்கள் அவர்கள்.
 
இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்பதை வலியுறுத்தியும் வீதிக்கு வந்து போராடினார்களே தமிழகத்தின் மாணவச் சொந்தங்கள் - அவர்களுடைய எழுச்சிதான் 'பதவி நாற்காலியிலிருந்து இறங்கவே மாட்டோம்' என்கிற கழகத்தின் நிலையைத் தலைகீழாய் மாற்றியது. மாணவர் போராட்டங்கள் மேலும் மேலும் வலுவடைந்ததைப் பார்த்து உறைந்துபோனது அறிவாலயம். இதற்குமேலும் மௌனம் சாதித்தால், சட்டையைப் பிடித்து உலுக்கவும் மாணவர் சமுதாயம் தயங்காது என்பதை உணர்ந்தபிறகே, 'வெளியேறுவோம்' என்று எச்சரித்தார் கருணாநிதி. மாணவர் சக்தியின் வலுவும் தெளிவும்தான் மூட்டை முடிச்சோடு டெல்லியிலிருந்து கழகம்  வெளியேறியதன் நிஜமான பின்னணியே தவிர, ஸ்டாலின் அல்ல!
 
மாணவப் பிள்ளைகளின் எழுச்சி, நம்மைப்போன்றோரை   நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. 2008 - 2009லேயே இந்த எழுச்சி ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்கள் நாம். அன்று நடக்காதது இன்று நடந்திருக்கிறது. பாலச்சந்திரன் என்கிற 12 வயதுப் பிள்ளையின் கள்ளங்கபடமில்லாத கூர்மையான பார்வை நம்மைத் துளைத்ததைப் போலவே, நமது மாணவச் செல்வங்களின் இதயங்களையும் துளைத்திருக்கிறது. பார்க்கிற ஒவ்வொருவரையும், 'நீங்கள் ஏன் எங்களுக்காகப் பேசவில்லை' என்று கேட்கிறது அந்தப் பிள்ளையின் பார்வை. ஈழ மண்ணில் நடந்த விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த  லட்சக்கணக்கான விடுதலைப் புலிகளும், அப்பாவித் தமிழ் மக்களும் ஏற்படுத்திய அதிர்வைப்போல் பலமடங்கு அதிர்வு   பாலச்சந்திரனின் புகைப்படத்தால் ஏற்பட்டிருக்கிறது தமிழ்நாட்டில்.
 
அந்த ஒரே ஒரு புகைப்படம் எவ்வளவோ மாற்றங்களுக்குக் காரணமாகிவிட்டது. தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஆதரித்து வாயைத் திறந்தாலே வழக்கு - என்கிற   நேரடி மற்றும்  மறைமுக அச்சுறுத்தல்கள் தமிழகத்தில் இருந்தன. தமிழகத் தமிழர்களின் வீரம்தான் உலகப் பிரசித்தி பெற்றதாயிற்றே... பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டார்கள் பலரும்! இன்று பாலச்சந்திரன் படத்துடன் பிரபாகரன் படத்தையும் தாங்கி நிற்கிறார்களே எங்கள் பிள்ளைகள்,... அவர்கள்தான், புலிகள் மீது தடையை நீக்கு - என்று அறிவுப்பூர்வமாக முழங்குகிறார்கள். இனப்படுகொலையைத் தடுக்க எதுவெல்லாம் முட்டுக்கட்டையாக இருந்ததோ, அதுவெல்லாம் நீக்கப்படவேண்டும் என்பது அவர்களது வலுவான வாதம்.
 
சேனல் 4 வெளியிட்ட பாலச்சந்திரனின் புகைப்படங்களை, லட்சக் கணக்கான தமிழக மாணவர்கள் உணர்வோடும் உரிமையோடும் எழுச்சியோடும் ஏந்திச் செல்வதைப் பார்த்தபிறகாவது திருந்தியிருக்கின்றனவா இங்கேயுள்ள கழகங்கள்? இல்லை. திருந்தாதோடு மட்டுமல்ல, பாலச்சந்திரன் என்கிற அந்த உன்னதமான குழந்தையின் படத்தை வெட்கமில்லாமல் பயன்படுத்திக்கொண்டு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறது  இரண்டு கழகமும்! அவர்களின் இந்த அருவருப்பான அரசியல் யுத்தம், தமிழ்நாட்டு அரசியலின் தரத்தை இன்னும் இரண்டுபடி இறக்கிவிட்டிருக்கிறது.
 
இத அப்பவே செஞ்சிருந்தா
நா செத்திருக்க மாட்டேன்ல, தாத்தா?
உயிர திரும்பத் தா... தா..!
என்று கருணாநிதியிடம் கேட்கிறது அ.தி.மு,க. சுவரொட்டி.
 
போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் என்று
அன்று நீங்கள் சொன்னதால்தானே
இன்று என்கதி இப்படி ஆகிவிட்டது அம்மா...
என்று அ.தி.மு.க.வுக்கு ஆப்புவைக்கிறது தி.மு.க. சுவரொட்டி.
 
முதலில் ஒட்டியவர் யார், பிறகு ஒட்டியவர் யார் - என்கிற கேள்வி தேவையற்றது. அவர்கள் சுவரொட்டி ஒட்டிக்கொள்வது பற்றி நமக்கு எரிச்சலும் இல்லை. (வீரமணி ஒருவரை வைத்தே சுவரொட்டி அச்சகங்கள் எத்தனை நாளுக்குத்தான் தாக்குப் பிடிக்கமுடியும்? இப்படி இரண்டுபேர் புதிதாகக் கிளம்பினால்தானே அவர்கள் தொழில் நடத்தமுடியும்!) இரண்டுபேரும் ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சித்துக் கொள்வதிலும் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
 
நம்முடைய கேள்வியெல்லாம், பாலச்சந்திரன் படத்தைப் பயன்படுத்திக்கொள்ள இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது - என்பது தான்! ஈடுஇணையில்லாத ஒரு நிஜமான வீரனின் இளையமகன் அந்தப் பிள்ளை. அவன் படத்தை, அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது என்ன நியாயம்? டெசோ சார்பில் கருணாநிதி அறிவித்த பொது வேலை நிறுத்தத்திற்கான விளம்பரச் சுவரொட்டியில், அவருடைய படத்துடன் பாலச்சந்திரன் படமும் இடம்பெற்றதைக் கடுமையாகக் கண்டித்தவன் என்கிற முறையில் கேட்கிறேன்.... விழிமூடி வீழ்ந்து கிடக்கிற எங்கள் பிள்ளையின் புகைப்படத்தை உங்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது அராஜகமா இல்லையா?
 
பங்கரில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையிலும் கம்பீரமாகத் திரும்பிப் பார்க்கிற பாலச்சந்திரன், பிஸ்கெட் சாப்பிடுகிற பாலச்சந்திரன், மார்பில் குண்டுகளைத் தாங்கி மாவீரனாக வீழ்ந்து கிடக்கிற பாலச்சந்திரன் - உலகின் மனசாட்சியை உலுக்கிய இந்தப் படங்கள் முதல்முதலாக வெளியானது பிப்ரவரி 18ம் தேதி இரவு. அந்தப் படத்தைப் பார்த்து ஒட்டுமொத்த உலகும் சிலிர்த்து எழுந்தபோது கழகங்கள் என்ன செய்துகொண்டிருந்தன?
 
பாலச்சந்திரனின் இந்தப் படங்களுடன், புலமைப் பரிசில் பட்டமளிப்பு விழா உடையில் தந்தையுடனும் தாயுடனும்  பெருமிதத்துடன் நிற்கிற பாலச்சந்திரன் படத்தையும் சேர்த்துப்  போட்டு "எங்கள் பிள்ளை பாலச்சந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி" என்று ஒரு கறுப்பு வெள்ளை சுவரொட்டியாவது ஒட்டப்பட்டதா கழகங்களின் தரப்பிலிருந்து! குறைந்தபட்சம், அப்படி ஒரு துண்டறிக்கையாவது வெளியிட்டார்களா? இன்றைக்கு எங்கள் மாணவச் செல்வங்கள் தமிழ்நாடு முழுக்க பாலச்சந்திரன் படத்தைத் தாங்கிநின்றபிறகு,  அந்தப் படம் சொல்கிற செய்தியை தமிழக மக்கள் மத்தியில் எடுத்துச்சென்ற பிறகு, அதைப் பயன்படுத்திக் கொண்டு கேடிபில்லா கில்லாடி ரங்கா ரேஞ்சுக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனமா இல்லையா?
 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பிரபாகரனின் ஈடு இணையற்ற தலைமையையும் உறுதியுடன் ஆதரித்து வடகிழக்கிலிருந்து வெளிவந்த ஒரு தமிழ்ப் பத்திரிகையில், அந்தப் பத்திரிகையை பிரபாகரன் படித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒருமுறை வெளியிடப்பட்டது. வெளியான அன்றே, அதன் ஆசிரியரை அழைத்துக் கண்டித்தார்கள் புலிகள். பத்திரிகைக்கான  விளம்பரம் போன்று தோன்றும் அந்தப் படத்தை வெளியிட்டது தவறு என்றார்கள். பாலச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்த போஸ்டர் ஒட்டாதவர்கள், ஒருவர் முகத்தில் ஒருவர் கரிபூச போஸ்டர் ஒட்டுகிறார்களே... இவர்களை யார் கண்டிப்பது?
 
முதலில் போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என்பது அபத்தமான  கேள்வி. 'அவன் என்மீது பேனா மையை ஊற்றியதால்தான் நான் அவன்மீது வீசினேன்' என்று ஏப்ரல் ஒன்றாம் தேதி சொல்கிற பள்ளிக் குழந்தைகளுக்கும், கழகங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? இப்படியொரு அருவருப்பான சுவரொட்டி யுத்தத்தில் இறங்கியதற்காக இரண்டு கழகங்களும் பகிரங்கமாக  மன்னிப்பு கேட்க வேண்டும். அ.தி.மு.க. தரப்பு சுவரொட்டிகளை வெளியிட்ட ரத்தத்தின் ரத்தங்கள் யார் என்பதை விசாரித்து அறிவது, மிகவும் சுலபம் முதல்வருக்கு! சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்தோ கட்சியிலிருந்து நீக்கியோ அரசியல் நாகரிகத்தை நிலைநாட்டவும், எதிர்க்கட்சிக்கு வழிகாட்டவும் முதல்வர் முன்வரவேண்டும்.
 
மே 17ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் - என்கிற  கோதபாய ராஜபட்சேவின் கோயபல்ஸ் பிரசாரத்துக்கு பதிலடி தரும் முகபாவத்துடன் கூடிய பாலச்சந்திரனின் புகைப்படம், பதில்களோடு சேர்த்து பல கேள்விகளையும்  எழுப்பியிருக்கிறது. அந்தப் புகைப்படங்களைப் பற்றி, மகிந்த ராஜபட்சேவும் சரத் பொன்சேகாவும் தெரிவித்திருக்கிற கருத்துகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பாலச்சந்திரன் புகைப்படங்களை சுவரொட்டியில் பயன்படுத்தும் கழகங்களின் பார்வைக்கு அந்தச் செய்திகள் வரவேயில்லையா?
 
பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொல்லவில்லையென்றும், ராணுவம் அதைச் செய்திருந்தால் தனது கவனத்துக்கு நிச்சயம் வந்திருக்குமென்றும் சொன்னது சிகப்புத்துண்டு மிருகம். பாலச்சந்திரன் கொல்லப்படவில்லை - என்று அந்த மிருகம் சொல்லவில்லை.
 
"அந்தப் படத்தில் பாலச்சந்திரனின் பின்னால் நிற்கும் ராணுவ வீரர் அணிந்திருக்கும் சீருடை இந்திய ராணுவத்தினர் அணிவதைப் போன்று உள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது இந்திய ராணுவவீரர்களைப்போல் உடையணிந்து புலிகள் நடமாடினர்" என்பது சரத் பொன்சேகாவின் ஒப்புதல் வாக்குமூலம். இந்த மிருகமும் பாலச்சந்திரன் கொல்லப்படவில்லை - என்று சொல்லவில்லை.
 
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைத் திட்டமிட்டவர்கள் மகிந்தனும் சரத்தும். திட்டமிட்டபடியே அப்பாவித் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்றவர்கள் இருவரும். அதனால்தான்,  அவர்கள் இருவரின் வாக்குமூலங்களையும் வார்த்தைக்கு வார்த்தை அலசிப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.
 
இந்திய ராணுவத்தினரின் சீருடையில் புலிகள் நடமாடியது தனக்குத் தெரியும் - என்கிறான் சரத். ஒரு வாதத்துக்கு அதை உண்மையென்று வைத்துக்கொள்வோம். இந்தியச் சீருடையில் இருப்பது தங்களுக்குப் பாதுகாப்பு - என்று நினைத்துத்தானே  புலிகள் அதை உடுத்தியிருக்கவேண்டும்! அப்படியென்றால் என்ன அர்த்தம்?
1. தமிழினப் படுகொலைக்கான களத்தில் சிங்கள ராணுவத்துடன் கைகோர்த்து இந்திய ராணுவமும் நின்றுகொண்டிருந்ததா? சிங்களக் கடற்படையின் கூலிப்படையாகச் செயல்பட்டு - இந்தியக் கடற்படை புலிகளின் கடற்படையை அழித்து ஒழித்ததைப்போல், சிங்களத் தரைப்படைக்கு இந்தியத் தரைப்படை  கூலிப்படையாய்ச் சென்றிருந்ததா?
2. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடமுடியாது - என்று கூசாமல் பேசும் இந்தியாவின் ராணுவம், தன்னுடைய சொந்தச் சீருடையுடன் வன்னி மண்ணில் நின்று சிங்களப் படைக்கு உதவியிருக்காவிட்டால், இந்தியச் சீருடை அணிந்தால்    சிங்களப் படைகளின் கண்ணில் மண்ணைத் தூவலாம் - என்கிற  எண்ணம் புலிகளுக்கு எப்படி வந்திருக்கும்?
3. ஒருவேளை, பாலச்சந்திரன் படுகொலை படம் வெளியானவுடன் அதிர்ந்துபோன சரத்பொன்சேகா, அந்தப் படத்தில் இருக்கும் இந்தியச் சிப்பாயை அல்லது அதிகாரியைக் காப்பாற்ற, 'இந்திய ராணுவ உடையில் புலிகள் நடமாடினர்' என்று பொய் சொல்கிறானா?
4. 'இந்திய ராணுவ உடையில் புலிகள்' என்று சரத் சொன்னது உண்மையாக இருந்தால், இனப்படுகொலை நடந்த களத்தில், இனப்படுகொலை செய்ய ஒத்தாசையாக இந்திய ராணுவமும் இருந்திருக்கிறது - என்பது உறுதியாகிவிடும். சரத் சொன்னது பொய்யாக இருந்தால், பாலச்சந்திரன் உடலுக்கு முன் நிற்பது, ஒரு இந்திய ராணுவ அதிகாரி தான் என்பது அம்பலமாகிவிடும். அது ஒரு இந்திய ராணுவ அதிகாரி தான் என்றால், பாலச்சந்திரன் என்கிற அந்தப் பச்சிளம் குழந்தை  படுகொலை செய்யப்பட்டதில் இந்தியாவின் பங்கு என்ன - என்கிற கேள்வி வலுவாக எழும். துடிக்கத் துடிக்க பாலச்சந்திரனைப் படுகொலை செய்தது சிங்கள ராணுவமா, இந்திய ராணுவமா - என்கிற கேள்வியும் அழுத்தமாக  எழும்.
 
பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை மறுக்காத மகிந்த ராஜபட்சே, 'பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொல்லவில்லை' என்று சொல்லியிருப்பதையும், சரத் சொல்லியிருப்பதையும் ஒப்பிட்டுப்பார்க்கும் பகுத்தறிவுள்ள எவருக்கும் இதுபோன்ற கேள்விகள் நிச்சயம் எழும். இலங்கைக்கும், அதன் ராணுவக் கூட்டாளி இந்தியாவுக்கும் தான் இந்த விடுகதைகளுக்கான விடை தெரியும்.
 
சரத்பொன்சேகாவின் வாக்குமூலம், இவ்வளவு சீரியஸான  கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல கேள்விகளையும் அது எழுப்பும். அந்தப் புகைப்படத்தை சேனல் 4 முழுமையாக வெளியிடும்போது, அந்த உடலின் முன் நிற்பவரின் முகம் ஊரறியத் தெரியும் போது, ஒவ்வொரு தமிழனின் இதயமும் தீப்பிடித்து எரியும். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தாத்தா - என்று இவரை அவர்களும், அம்மா - என்று அவரை இவர்களும் உறவுபாராட்டிக் கொண்டிருப்பதும், போஸ்டர் ஒட்ட  கஞ்சி காய்ச்சிக் கொண்டிருப்பதும் கொடுமையிலும் கொடுமை.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
மாணவச் செல்வங்களே!
வருகிறது ஐ.பி.எல்... உஷார்!
 
மாணவர் போராட்டக் களங்களில் நிற்கும் மாணவர்கள்,  மாணவிகள் அனைவருமே சுயமாகச் சிந்திக்கிறார்கள். அவர்களிடம் ஒரு அரை மணிநேரம் பேசும் எவரும் இதைப் புரிந்து கொள்ளமுடியும்.
 
சென்னையைச் சேர்ந்த ஒரு பொறியியல் கல்லூரி மாணவி, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல். டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டிகளைச் சென்னையில் நடக்க   அனுமதிக்கக்கூடாது - என்றார் உறுதியுடன். எந்தெந்த அணியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் - என்பதை அந்தச் சகோதரி விவரித்தபோது வியப்பாக இருந்தது.
 
இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது ஐ.பி.எல். போட்டிகள் தொடங்க! நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்கும் மாணவச் செல்வங்கள் இந்தப் போட்டிகளை உரியமுறையில் வலுவாக  எதிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் மாணவச் செல்வங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
 
எந்தெந்த அணியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்களோ, அந்த அணிகளின் நிர்வாகங்களை உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உங்களுக்கு இது மிகவும் எளிதான வேலை. அவரவர்  அணியிலுள்ள இலங்கை வீரர்களை, "எங்கள் நாட்டில் தமிழினத்தின் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட இனப்படுகொலை" -  என்கிற உண்மையை பகிரங்கமாக அறிவிக்கச் சொல்லுங்கள். நடந்த இனப்படுகொலைக்காக, ஊடகங்களைச் சந்தித்து,  வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். 'இலங்கை வீரர்கள் இதைச் செய்தால் மட்டுமே, அவர்கள் பங்கேற்கும் போட்டிகளை அனுமதிக்கமுடியும்' - என்று வலுவாகவும்  தெளிவாகவும் எச்சரிக்கை செய்யுங்கள்.
 
ஒன்று, போட்டிகள் தடையின்றி நடக்க வழிவகுக்கும் விதத்தில்,    இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உங்கள் நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லாமல், இனப்படுகொலை செய்த ராஜபட்சே தான் கிரிக்கெட்டை விட முக்கியம் என்று  அவர்கள் கருதினால், அந்த மரண வியாபாரிகளின் தூதுவர்களை சென்னைக்குள் விளையாட அனுமதிக்கவே கூடாது. மாணவர் சக்தி இணைந்து நின்றால், இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடக்கும்.
 
கிரிக்கெட் ரசிகர்களைப் பற்றி மாணவர்கள் கவலைப்படவே வேண்டாம். அவர்கள் ஒன்றும் மகிந்த ராஜபட்சே மாதிரி  மிருகங்கள் இல்லை. பாலச்சந்திரன் சிந்திய ரத்தம், அவர்களை மட்டும் கண்கலங்க வைக்கவில்லையா என்ன? இப்படியொரு வாய்ப்பை இலங்கை வீரர்களுக்கு மாணவர்கள் கொடுத்தால், "எங்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வெளிப்படையாக உண்மையை அறிவியுங்கள்" என்று, இலங்கை கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களே கூட வலியுறுத்துவார்கள்.
 
இலங்கை வீரர்கள் அப்படியெல்லாம் அறிவிக்காமல், போட்டியை எப்படியாவது நடத்த கிரிக்கெட் வியாபாரிகள் முயன்றால், அதற்கு எதிரான போர்க்களத்தில் - கிரிக்கெட் ரசிகர்களும்  மாணவர்களுடன் இணைந்து நிற்பார்களே தவிர, கிரிக்கெட் வியாபாரிகளைக் காப்பாற்ற முயலமாட்டார்கள். அவ்வளவு ஏன், சிங்களக் கால்பந்தாட்ட அணியை இங்கேயிருந்து விரட்டியடித்த முதல்வர் ஜெயலலிதா, மாணவர் தரப்பு நியாயத்தை வலியுறுத்தாமல், கிரிக்கெட் வியாபாரிகளுக்குத் துணைநிற்கப் போகிறாரா என்ன!
 
          
 
 

No comments:

Post a Comment