ஜெனீவாத் தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல, ஆனால் இலங்கைக்கு தோல்வி! – ருத்திரகுமாரன்
- Friday, Mar 22, 2013 3:35 pm
- தமிழீழம் / இலங்கை
- 6 comments

இன்று ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை குறித்து வி.உருத்திரமாரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் :
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 13 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 26 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையும் வகித்திருந்தன.
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும்.
அனைத்துலக அழுத்தங்கள் எதுவுமின்றி தான் விரும்பியவாறு அதிகாரத்தை தமிழர் தேசத்தின் மீதும் இலங்கைத்தீவின் ஏனைய மக்கள்மீதும் செலுத்த விரும்பும் மகிந்த இராஜபக்சவின் குடும்பஆட்சிக்கு இத் தீர்மானம் ஒருதொல்லையாகவே இருக்கும். மேலும் இத்தகைய தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதும் நிறைவேற்றப்படுவதும் சிங்களம் மறைக்கவும் மறக்கவும் விரும்பும் இறுதிக் போர்க்கால நிகழ்வுகளை அனைத்துலக அரங்கில் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கு வழிகோலச் செய்கிறது.
கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது சிறிலங்காவுக்கான ஆதரவு வீழ்ச்சியும் அமைந்திருக்கிறது. சிறிலங்காவின் உறுதியான ஆதரவு நாடான யப்பான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலைமை வகித்திருப்பதனை இங்கு குறிப்பிடலாம்.
சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளை சிறிலங்காவின் ஆதரவு நாடுகள் என்பதனை விட ஏதோ ஒருவகையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகைளுடன் முரண்பட்ட நாடுகள் எனக் குறிப்பிடுவதும் கூடுதல் பொருத்தமாக இருக்கும்.
இந்த உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கில் (unipolar world order) இருந்து விலகி பலமுனை உலக ஒழுங்கினுள் (Mulit-polar world order)நுழையும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதும் சிறிலங்கா அனைத்துலக அரங்கில் கூடுதலான தனிமைப்பட்டு வருகிறது என்பதனை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை வாக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்படுவது மிகவும் முக்கியமானது.
முதலாவது, ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களஅரசு இனஅழிப்பு (Genocide) புரிகிறது எனும் விடயம் தீர்மானத்தில் உள்ளடக்கபடல்.
இரண்டாவது, இன அழிப்பில் ஈடுப்பட்டவர்கள் மீது அனைத்துலகப் பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியான பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டுவர்களுக்கு நீதிவழங்கப்படவேண்டும் என்பது உள்ளடக்கபடல்.
இவ் இரண்டு விடயங்களையும் அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கவில்லை. இதனால் இத் தீர்மானத்தை தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் தீர்மானமாக, திருப்பதிப்படுத்தும் தீர்மானமாக நாம் கருதமுடியாது.

குறைந்தபட்சம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதுகூட தீர்மானத்தில் உரியவகையில் உள்ளடக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.
மத அடிப்படையிலும் அரசியல் கருத்து அடிப்படையிலும் இலங்கைத் தீவில் மனிதஉரிமைகள் மீறப்படுகின்றன என்று குறிப்பிடும் இத் தீர்மானம் இலங்கைத் தீவில் பாரியமுறையில் மனிதஉரிமை மீறல்கள் தமிழினம் அடிப்படையிலேயே மீறப்படுகின்றன என்ற உண்மையை சுட்டிக்காட்டாமையை நாம் கண்டிக்கின்றோம்.
இத் தருணத்தில், நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்களை மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் முக்கியம் எனக் கருதுகிறேன். நாம் உலக அரசுகளுடன் நமக்கு நியாயம் கிடைப்பதற்காக அரசியல் இராஜதந்திர வழிகளில் தொடர்சியாகப் போராடவேண்டியவர்களாக உள்ளோம்.
இலங்கைத்தீவில் சிங்கள அரசாங்கம் தமிழீழ மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர வன்முறை இன அழிப்பின் (genocide) பாற்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான விடயமல்ல. இருப்பினும் இதனை இனஅழிப்பாக வெளிப்படுத்தாது வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தது இரு தரப்பிரானாலும் புரியப்பட்ட போர்குற்றம் என்ற நிலைப்பாட்டையே அனைத்துலக அரசுகள் கொண்டிருக்கின்றன.
இன அழிப்பை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பாதுகாப்பான தீர்வாக பாதுகாப்பு, (self defense), தன்னினம் பேணுதல் (self preservation) ஆகிய சர்வதேச சட்ட தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பரிகார நீதியாக remedial justice ) தமிழீழத் தனிஅரசுஅமைக்கும் நிலையை ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலை அனைத்துலக அரசுகளுக்கு ஏற்படும். இதன் காரணமாக உண்மை தெரிந்திருந்தும் இந்தப் பிரச்சனையை தாம் பேணவிரும்பும் எல்லைகளுக்குள்ளேயே சுழல விடுகின்றன.
இத்தகைய அரசுகளை நாம் எவ்வாறு அணுகப்போகிறோம்? இது குறித்த மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் நாம் நன்கு வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.

இதனால் இன்று நமது மூலோபாயமாக பலம்மிக்க அரசுகளுக்கும் நமது எதிரியான சிங்கள அரசுக்கும் உள்ள நெருக்கத்தை எவ்வாறு குறைத்து கொள்வது குறித்தும் பலமிக்க அரசுகளினுடன் நாம் எவ்வாறு நமது உறவுகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ளப் போகின்றோம் என்பது குறித்தும் இருக்கவேண்டும். இதற்காக நாம் நமது நலன்களை அனைத்துலக அரசுகளிடம் பலியிடமுடியாது. அதேவேளையில் அனைத்துலக அரசுகளும் உடனடியாக தமது நலன்களை முழுமையாக கைவிட்டு நியாயத்தின் அடிப்படையில் நம்மை ஆதரித்துக்கொள்ளும் எனவும் எதிபார்க்கமுடியாது. இதனால் பலம்மிக்க அரசுகளை கையாளுவதற்கு நாம் இரண்டு தந்திரோபாயங்களை கையாளல் பயன்தரும் எனக் கருதுகிறேன்.
முதலாவது, நமது நலன்களையும் பலமிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறு இணைய வைப்பது என்பது குறித்து சிந்திப்பதும் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொள்வதுமாகும். அது இராஜதந்திரமட்டத்தில் நடைபெற வேண்டியது.
இரண்டாவது, நாம் மக்களாக அரசுகளுடன் ஜனநாயக வழியில் அரசியல் ரீதியாகப் போராடுவது.
இவ் இரண்டு வழிமுறைகளும் ஒன்றோடொன்று கை கோர்த்துச் செல்லவேண்டும். அரசுகள் தமது நலன்கள் என்ற அச்சில் சுழல்பவை. ஆனால் இந்த அரசுகளை இயக்குவதில் அரசியல் தலைவர்களுக்கு முக்கிய பங்குண்டு.
அரசியல் தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு என்பது மிகவும் முக்கியமானது. மக்கள் ஆதரவை வென்றெடுத்தல் என்பது அரசியல் தலைவர்களுக்கு முக்கியமான நலன்சார் விடயமாகும். அதனால் அரச இயந்திரத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நலன்கள் எல்லா விடயங்களிலும் ஒன்றாக அமைந்து விடுவதில்லை. பல சந்தரப்பங்களில் மக்கள் ஆதரவினை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அரச தலைவர்கள் தமது அரசின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவதுண்டு.

தற்போது இடம்பெற்றுவரும் தமிழக மாணவர் போராட்டங்கள் இன அழிப்புக்குறித்தும் அனைத்துலக விசாரணையையும் சுதந்திர தமிழீழம் குறித்தும் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் வாக்கெடுப்பினையும் வலியுறுத்துகின்றன. ஈழத் தமிழ் மக்ககள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு சுதந்திர தமிழீழம் தவிர்ந்த மாற்றுவழி இல்லை என்பதனை நன்கு புரிந்துகொண்டவர்களாகவே தமிழக மாணவர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.
ஈழத் தமிழ்மக்களுக்காக போராட்டகளத்தில் குதித்திருக்கும் தமிழக மாணவ சமுதாயத்தின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் பற்றிக் கொள்கின்றோம். மாணவர்களின் போராட்டங்களை ஆதரித்து நிற்கும் அரசியல் தலைவர்களோடும் தமிழக மக்களுடனும் நாம் தோழமையோடு நமது கரங்களை இணைத்துக் கொள்கின்றோம்.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி இந்திய அரசை தம் வசப்படுத்துவதில் தமிழகம் அடையும் வெற்றியில் பெரிதும் தங்கியுள்ளது என்பது அரசியல் யதார்த்தமாக உள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தென்னாசியப் பகுதியில் இந்தியா ஒரு முதன்மைசக்தி என்ற அடிப்படையிலும் வளர்ச்சியடையும் உலகசக்தி என்ற அடிப்படையிலும் தான் உலக இராஜதந்திரக் கணக்கு எழுதப்படுகின்றது. உலக ஒழுங்கு தீர்மானிக்கப்படுகின்றது . இதனால் தென்னாசியாவில் தமிழீழம் என்றும் புதிய நாடு உருவாவதில் இந்தியாவின் பாத்திரம் முக்கியமானது.
இதனால் நாம் தமிழீழ விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கான நமது மூலோபாயத்தில் இந்திய அரசு சுதந்திரத் தமிழீழத்தை அங்கீகரிக்கவைக்கும் இலக்கினை கொண்டவர்களாக இயங்கவேண்டும். இது உடனடியாக சாத்தியப் படாத விடயமாக இருக்கலாம். ஆனால் உள்நாட்டு நிலைமைகளை அந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.
உதாரணமாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு மலேசியா எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலை வகித்தள்ளது. சிறிலங்காவை நட்பு நாடாகக் கொண்டிருந்து போதும் மலேசியத் தமிழ்மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையே மலேசிய அரசு இந்த முடிவு எடுப்பதற்கு முக்கிய காரணம்.

தமிழக மாணவர்கள் தமது சக்தியை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர். மாணர்கள் தமது போராட்டங்களை இந்தியா தமிழீழத்தை அங்கிகரிக்க வேண்டிய ஒரு சூழலை ஏற்படுத்தும்வரை ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொடர்வதனை காலம் வேண்டி நிற்கின்றது.
தமிழகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அமெரிக்கா உன்னிப்பாக தொடர்ச்சியாக அவதானித்துககொண்டு இருக்கிறது என்பதையும் நான் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ளவிரும்புகிறேன். தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்று. தமிழகம் மீதுஅமெரிக்கா கொண்டுள்ள அக்கறையினை அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் Hillary Clinton தமிழகத்துக்கு வருகை தந்தமை ஊடாகவும் நாம் புரிந்து கொள்ளமுடியும். அதனால் தமிழகத்தில் இடம்பெறும் போரட்டங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் அனைத்துலக மட்டத்தில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் உண்டு என்பதனையும் நாம் இங்கு குறித்துக் கொள்ளவேண்டும்.
ஐக்கிய நாடுகள் நிறைவேறியுள்ள தீர்மானம் நமது மக்களுக்கு நீதிதரும் வகையில் அமையவில்லை என்பதால் நாம் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. சலிப்புக் கொள்ளவும் தேவையிவில்லை. நாம் நமது இலக்கில் முன்னேறிவருகிறோம். நாம் இன்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பாங்-கி மூன் இன் சட்டஆலோசகர்கள் கூறியபடி செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகய் சாசனத்தின் 99வது பிரிவின் கீழ் அவருக்குள்ள உள்ளார்ந்த அதிகாரத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்கும்படி கோரி மூன்று மாதகால உலகளாவியரீதியில் கையெழுத்து வேட்கையை மனிதஉரிமை அமைப்புக்களுடனும் ஏனைய தமிழ் அமைப்புக்களுடனும் சேர்ந்து நாம் இன்று ஆரம்பிக்கின்றோம்.
அத்துடன் 2012 நவம்பர் மாத ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் உள்ளார்ந்த அறிக்கையில் கூறப்பட்ட செயலாளர் நாயகத்தின் இன அழிப்பைத் தடுக்கும் பிரிவினால் இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட 2007ம் ஆண்டு அறிக்கையையும் தமிழர்கள் தொடர்பான ஏனைய ஆவணங்களையும் வெளியிடுமாறு கோரும் கையெழுத்து வேட்டையினை உலகளாவியரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்று ஆரம்பிக்கின்றது. அடிக்குமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது நம்மிடையே உள்ள ஒரு பழமொழி. என வி.உருத்திரகுமரன் தன் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.
SHARE THIS STORY :
RELATED POSTS
உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)
- சோழ வேந்தன் wrote on 22 March, 2013, 16:39தனி நாடு ஒன்றே தீர்வு,அதுவும் தமிழர் நாட்டில்தான் ஆரம்பமாகும்!
- chola mannan peran wrote on 22 March, 2013, 18:08தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.அது ஒரு நாள் நடந்தே தீரும்.இது உறுதி.தமிழக மாணவர்கள் போற்றுதளுக்குரியவர்கள்.உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்.
- BOTHIVARMAR wrote on 22 March, 2013, 19:14தமிழ் நாட்டில் ஈழப் பிரச்னையை மாணவர்கள் கையில் எடுத்திருக்கின்றனர். இத்தனை ஆண்டு காலம் அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக தமிழ் ஈழம் பலியாகிக் கொண்டிருந்தது. இப்போது தான் சரியான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாணவர் சக்தி விரைவில் தெரிய வரும்.
- kalidass wrote on 22 March, 2013, 19:19அய்யா உங்கள் உடம்பில் ஓடும் ரத்தமும் எங்கள் உடம்பில் ஓடுவதும் ஒன்றுதானே.கடைசி மலேசியா தமிழன் உள்ளவரை உங்களுக்கு நீதி கிடைக்காமல் எங்கள் ஆன்மா அடங்காது .
- arivan wrote on 23 March, 2013, 14:42எழுவோம் விழ விழ எழுவோம்.தமிழ் ஈழம் காணும் வரை
- mu.pa.karigalan wrote on 23 March, 2013, 16:25ஈழத் தமிழர் பிரச்சனையில் மலேசியா நாடு நிலை வகித்தது இங்குள்ள தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.பல நாடுகளில் முஸ்லீம் மக்கள் பாதிக்கப் படும்போது மனித உரிமை விவகாரத்தை கையில் எடுக்கும் மலேசியா ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை மட்டும் மத ரீதியில் நரி வேலை செய்து விட்டது.இந்த விஷயத்தில் இங்குள்ள தமிழர்களை அது கொஞ்சமும் மதிக்கவில்லை.இந்த நாட்டை வளப்படுத்தியவர்களில் நமது தமிழர்களின் பங்கு கொஞ்ச நஞ்சமில்லை.இதற்கு அரசாங்கம் அங்கீகாரம் கொடுப்பதாக தெரியவில்
No comments:
Post a Comment