Monday, March 18, 2013


தமிழீழ சாசனம்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அடுத்தபடியாக அமையவேண்டும்! - கலாநிதி ராம் சிவலிங்கம்
[ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 08:13.36 PM GMT ]
தமிழீழ சாசனம் எம்மவர்க்கு வழிகாட்டியாகவும் உலகிற்கு ஓர் உதாரணமாகவும் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு அடுத்த படியாகவும் அமையவேண்டும். தமிழர் தேசியக் கூட்டணிபின் 1977ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, நாம் காணும் தமிழீழத்துக்கான இந்த சாசனம் தயாரிக்கப்பட வேண்டும்.
இதுகண்டு, வாடிநிற்கும் எம் உறவுகள் வாழத் துடிக்கவேண்டும், சோர்ந்துபோகும் உலகம் எம்மோடு சேர்ந்து செயற்பட வேண்டும்.
1948ம் ஆண்டுக்கு முன் தமிழீழத்தில் வாழ்ந்தவர்களும் அவர்கள் சந்ததியும் இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தின் பிரஜைகளாக வேண்டும். சாதி, சமய, இன பேதமின்றி சகலருக்கும் ஒரே அளவிலான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். மாற்றார் கலாச்சாரம் இங்கு மதிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தத்தில், மனித உரிமையை மதிக்கும் நாடுகளின் மையமாக தமிழீழம் விளங்க வேண்டும்
பெண்கள் சமஉரிமைக்கு அர்த்தத்தைக் கொடுக்கும் முதல் நாடாக தமிழீழம் மிளிரவேண்டும். பெண்மைக்கு முதலிடம் கொடுக்கும் பண்பாட்டைக்க் கொண்ட நாம் , வாயளவில் மட்டும் வழங்கும் மற்ற நாடுகள்போல் இல்லாது, செயலளவிலும் அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதாவது, தேசியத்தலைவரின் இலட்சியப் பாதையிலிருந்து எள்ளளவும் தவறாது நாம் பயணிக்க வேண்டும்.
கல்விக்கு முதலிடம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட நாம் இலவசக் கல்விக்கு இடமளிக்க வேண்டும். ஆரம்பப் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இந்த இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். தொன்மை மிக்க எமது கலாச்சாரத்தை எடுத்தியம்பும் இயல், இசை, நாடகத்தை ஊக்குவிக்கும் விதத்தில் எமது பாடத்திட்டமும், அதற்கான சலுகைகளும் அமைய வேண்டும்.
நீதித்துறை சுயமாக இயங்கவேண்டும். அங்கு, பணத்தில் மிதக்கும் செல்வந்தருக்குக் கிடைக்கும் வசதிகளும் வாய்ப்பும் வறியவர்களுக்கும் கிடைக்க வேண்டும். நீதியை விலை கொடுத்து வாங்கும் சம்பிரதாயம் இல்லாத/ தோன்றாத வகையிலான சட்டங்கள் இங்கு முன்மொழியப்பட வேண்டும். இது கண்ணியமும், நாணயமும் கொண்ட ஓர் சமுதாயத்தை உருவாக்க உதவ வேண்டும்.
தமிழீழத்தின் சுயதேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் எமது பொருளாதாரக் கொள்கை தீட்டப்பட வேண்டும். பரந்த நிலத்தையும், விரிந்த கடலையும் கொண்ட எமது புண்ணிய பூமியின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும சக்தி வாய்ந்ததாக இப்பொருளாதாரக் கொள்கை அமைய வேண்டும். திருகோணமலைத் துறைமுகம் சர்வதேசக் கப்பல்கள் தங்கிப்போகும் இடமாக மிளிர வேண்டும்.
தமிழீழ சாசனம் நாடுகடந்த தமிழீழ அரசின் சிந்தனையில் உருவானதாயினும், இது தமிழருக்காக தமிழரால் எழுதப்படும் ஓர் சர்ரித்திரம் படைக்கும் பத்திரம். காலம் காலமாக எமது எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், எத்தனை தலைமுறை சென்றாலும் எமமவர் பெருமையுடன் பேசும் அரசியல் ஓவியமாகவும் இந்த சாசனம் விளங்கவேண்டும்.
தந்தை செல்வா, பொன்னம்பலம், தொண்டமான் போன்ற அனுபவமும் திறமையும் கொண்டவர்களால் எழுதப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அடுத்த படியாக இந்த தமிழீழ சாசனம் அமைய வேண்டுமானால் இங்கு கூறப்பட்ட/ குறிப்பிடப்படாத, சாசனத்துக்கு உரிய, விடயங்களை கோர்வையாக தொகுக்க திறமைமிக்க சட்டவல்லுணர்களும், நிபுணர்களும், கல்விமான்களும், அனுபவமுள்ள அரசியல்வாதிகளும் எந்த்ந்வித பேதமின்றி தாமாக பங்குகொள்ள தயங்காது முன்வர வேண்டும்.
அதேவேளை, பிறந்தநாள் தொடக்கம் இறக்கும்வரை வாழ்க்கையை அரசியலுடனும், அரசியலை வாழ்க்கையுடனும் பின்னிப் பிணைந்து வாழும் என் இனிய உறவுகளே! வழ்க்கையுடன் அரசியலை இணைக்கும் பத்திரமான இந்த சாசனத்தை எழுத உங்களைவிட யார் தகுதி வாய்ந்தவர்கள்? நாடுகடந்த தமிழீழ அரசினால் தயாரிக்கப்பட்ட கேள்விக் கொத்தை நிரப்பி அனுப்புங்கள் இல்லையேல் உங்கள் கருத்தை/ எண்ணத்தை எழுத்து வடிவில் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
தொடர்புகளுக்கு:
www.tamileelamfreedomcharter.org

sivalingham@synpatico.ca

No comments:

Post a Comment